ஒரு எலி ஒரு பண்ணையார் வீட்டில் வெகுகாலமாக உல்லாசமாக வாழ்ந்தது, வழக்கம்போல் இரவில் உணவு தேட வெளியே புறப்பட்டது
அப்போது பண்ணையாரும் அவருடைய மனைவியும் ஒரு பெட்டியை பிறிப்பதை கண்டது தனக்குத்தான் ஏதோ உணவு கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் எலியும் அதை பார்க்க அவர்கள் அதிலிருந்து ஒரு பெரிய எலி பொறியை வெளியே எடுத்தனர்...
அதை கண்ட எலி மிகவும் பயந்தது நொந்து போனது, இந்த எலி பொறியை வீட்டிலிருந்து தூக்கி எறிய வேண்டும், அல்லது உடைத்தெறிய வேண்டும் என்று திட்டம் போட்டது அதற்கு உதவிக்கு யாராவது துணை வேண்டும் என்று வேகமாக தோட்டத்திற்கு ஓடி ஒரு கோழியிடம்...
"என்னை கொல்ல எலி பொறி வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை உடைக்க எனக்கு உதவி செய்யவேண்டும்!" என்றது கோழியோ சத்தமாக சிரித்து... "அந்த பொறியினால் எனக்கு எந்த ஆபத்துமில்லை அது உன்னுடைய பிரச்சினை அதை நீதான் சரிசெய்யவேண்டும் முதலில் இங்கிருந்து போ!" என சொல்லி விரட்டியது,
அடுத்து வேகமாக ஓடிய எலி ஒரு கிடா ஆட்டிடம் சென்று "கிடா அண்ணே என்னை கொலை செய்ய ஒரு பொறி வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை தூக்கி வெளியே எறிய வேண்டும் என்றது...
நக்கலுடன் சிரித்த அந்த கிடா ஆடு "எலி பொறிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், உனக்கு உதவினால் எனக்கென்ன கிடைக்கும்? நீ இருந்தாலும் செத்தாலும் எனக்கென்ன...!" என்றது... மிகவும் மன வருத்தத்தில் இருந்த எலி வானத்தை பார்த்து கடவுளிடம் வேண்டியது...
அப்போது திடீரென "படார்" என்று ஒரு சத்தம் கேட்டது பண்ணையார் அம்மா வேகமாக ஓடி அந்த எலி பொறியில் ஒரு பாம்பு மாட்டிக்கொண்டது என தெரியாமல் அதை திறக்க வலியில் துடித்த அந்த பாம்பு ஓங்கி ஒரே போடாக பண்ணையார் அம்மாவை கொத்திவிட்டது...
வீட்டில் இருந்தவர்கள் பரபரப்புடன் பண்ணையார் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர், விஷம் இறங்கிவிட்டது ஆனால் காய்ச்சல்தான் இன்னும் இறங்கவில்லை அதற்கு கோழி சூப் குடித்தால் இறங்கிவிடும் என்று யாரோ ஒருவர் கூற...
உடனே பண்ணையிலிருந்து ஒரு கோழியை பிடித்து அறுத்து சூப்பு வைத்து கொடுத்தனர்...
உடல் நலம் தேறி வீட்டிற்கு நல்லபடியாக தன் மனைவி வந்துவிட்டால் குலச்சாமிக்கு ஒரு கிடா விருந்து வைக்கவேண்டும் என்று நினைத்த அந்த பண்ணையார்...
அதன்படி பண்ணையில் இருந்த ஒரு கிடாவை பிடித்து எல்லோருக்கும் விருந்து வைத்தார்.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த அந்த எலி தன்னுடைய பிரச்சினை மட்டும் இன்னும் தீரவில்லையே என மறுபடியும் சோகமானது...
திடீரென யோசித்த பண்ணையார் இந்த எலி பொறியினால்தான் தன் மனைவிக்கு இந்த நிலைமை தனக்கும் எவ்வளவு செலவு என அந்த பொறியை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டார்.
அதை பார்த்த அந்த எலி ஒரு மெல்லிய புன்னைகையுடன் வானத்தை பார்த்து கடவுளுக்கு நன்றி சொன்னது.
நீதி.
ஒருவர் பிரச்சினை என்று உங்களிடம் வந்தால் அவரை மேலும் புண்படுத்தாதீர். ஏனெனில் காலம் ஒரு சக்கரம் போன்றது எப்போது யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக